கன்னியாகுமரி: நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் பகுதியில் வசித்து வருபவர் டேவிட் பிர்லா சிங் (50). இவரது தந்தை காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது இறந்து விட்டார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில், முதுகுத் தண்டில் அடிப்பட்டு நடக்க முடியாமல் போன நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக டேவிட் பிர்லா சிங் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு கிடைத்து வந்த ஊனமுற்றோர் உதவி தொகையான 1000 ரூபாய், ரேஷன் அரிசி உள்ளிட்டவை திடீரென நிறுத்தப்பட்டன. இது குறித்து அவரது உறவினர்கள் அலுவலர்களிடம் தெரிவித்தபோது, ஆதார் அட்டை இல்லை என்பதால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆதார் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் ஆதார் அட்டை பெற அவர் நேரில் தான் வர வேண்டுமென அலுவலர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் டேவிட் பிர்லா சிங்கால் நிற்கக் கூட முடியாத சூழலில், அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் வீட்டிற்கு வந்து பதிவு செய்யக் கேட்டு பலமுறை மனு அளித்துள்ளனர். எனினும் அவற்றால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து திடீரென அலுவலர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்று மாவட்ட ஆட்சியரிடம் ’தொடர்ந்து மனு அளித்து தொந்தரவு செய்யாதீர்கள்’ என்று கோபப்பட்டுள்ளார். மேலும் அவரின் நிலையை நேரில் பார்த்தும் நீங்கள் எப்படி இருந்தாலும் மையத்திற்கு வந்தால் மட்டுமே ஆதார் எடுக்க முடியும் என்று முடிவாக சொல்லியும் சென்றுள்ளார்.
இதனையடுத்து வேறு வழியின்றி சிங்கின் கல்லூரி நண்பர்களான ஜோ, சதீஸ் ஆகியோர் மிகுந்த சிரமத்துக்கு இடையில் அவரை ஆதார் மையத்திற்கு தூக்கிச் சென்று நேற்று (ஜூன்.30) ஆதார் பதிவு செய்தனர்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னை கட்டாயப்படுத்தி நேரில் அழைத்தது போன்று மற்ற நோயாளிகளையும் அழைக்காதீர்கள். புதிய அரசு சிறப்பாக செயல்படுவதாக அறிந்தேன். எனக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: சேலத்தில் பாலுறுப்பை வெட்டிக் கொண்ட இளைஞர்?