கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 1,253 பேர் கரோனா பெருந்தொற்று பரிசோதனைக்காக, சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். இதில் டெல்லி சென்று திரும்பிய 4 பேர், சென்னை விமான நிலையத்தில் பணியாற்றியவர் ஒருவர், மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 11 பேர் என மொத்தம் 16 பேருக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு கரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் கடந்த 22ஆம் தேதி தேங்காய்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று தேங்காய்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண், மணிக்கட்டிபொட்டல் பகுதியைச் சேர்ந்த 77 வயது முதியவர் என இரண்டு பேர் பூரண குணமடைந்து உடல்நலத்துடன் இன்று வீடு திரும்பினர்.
அதனைத்தொடர்ந்து இன்னும் 13 பேர் கரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் சீராக உள்ளதாகவும், இதுவரை 1066 பேருக்கு பரிசோதனை முடிவுகள் கரோனா பெருந்தொற்று இல்லை என்று வந்துள்ள நிலையில், மீதமுள்ள 187 பேரின் சளி மாதிரிகள் ஆய்விற்கு எடுத்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தைல காட்டில் தனிமையிலிருந்த காதல் ஜோடி... ட்ரோனை பார்த்து தெறித்து ஓட்டம்!