கன்னியாகுமரி மாவட்டம் இலக்குமிபுரத்தில் அரசு உதவிப் பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு, 200க்கும் மேற்பட்ட அரசு ஊதியம் பெறும் பேராசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதியத்தை அரசிடம் இருந்து கல்லூரி நிர்வாகம் பெற்று வழங்கி வந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழக்கப்படவில்லை.
பேராசிரியர்களின் ஊதியத்தை அரசு நேரடியாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு அளித்தது. இந்த உத்தரவை அமல்படுத்த அரசு உயர்கல்வி துறையோ கல்லூரி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து கல்லூரிக்கு வந்த பேராசிரியர்களும், மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் கோஷமிட்டபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாக பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.