கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமூட்டுகடை பகுதியில் ஆர்.பி.ஏ. என்ற தனியார் பள்ளி, கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களின் தாளாளரும் உரிமையாளருமான பிரான்சிஸுக்கும் ரியல் எஸ்டேட் (மனை வணிகம்) உரிமையாளரான விரிகோட்டையைச் சேர்ந்த ஆனந்த ராஜன் என்பவருக்கும் இடையே வழித் தகராறு இருந்துள்ளது.
இந்த நிலையில், நட்டாலம் பஞ்சாயத்துத் தலைவர் ராஜ்குமார் தூண்டுதலின்பேரில் ஐம்பது பேர் கொண்ட கூலிப்படை கும்பல் ஆயுதங்களுடன் கல்லூரிக்குள் நுழைந்து ஜன்னல், கதவு, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியுள்ளார்.
மேலும் கல்லூரி சுற்றுச்சுவரை இடித்துவிட்டு கல்லூரி தாளாளரைக் கடுமையாகத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த தாளாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் காட்சிகள் கல்லூரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன. இந்தக் காட்சிகளை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்குப்பதிவு செய்து மார்த்தாண்டம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.