கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதன் மற்றும் சுபாஷினி. இந்த தம்பதியினருக்கு மகிழினி என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுபாஷினி மற்றும் அவரது மகள் மகிழினி இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து இருவரும் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள ஜே.கே என்கிற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அதிகாலை சமயத்தில் மர்ம நபர் ஒருவர் சுபாஷினி மற்றும் அவரது மகள் தங்கி இருந்த அறைக்குள் சென்றுள்ளார்.
அப்போது அறையில் தூங்கிக் கொண்டு இருப்பவர்களுக்குச் சத்தம் கேட்டு விடக் கூடாது என, தனது செருப்பை வெளியே கழற்றி விட்டு, குழந்தையைக் கடத்த முயற்சி செய்து உள்ளார். குழந்தையின் சத்தம் போடவே, தூங்கிக் கொண்டு இருந்த சுபாஷினியின் தாயார் விழித்து கொண்டு, உடனடியாக சுதாரித்துக் கொண்டார்.
பின்னர் குழந்தையைக் கடத்த முயன்ற நபரை சுபாஷினியின் தாயார் முயன்றுள்ளார். இருப்பினும் அந்த மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்தில், குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
அப்புகாரின் அடிப்படையில் வடசேரி காவல் துறையினர், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, அந்நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் பேருந்து நிலயத்தில், பெண்மணி ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்த நரிக்குறவர் இன மக்களின் குழந்தையைக் கடத்தி, கேரளாவிற்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய முயன்ற போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று வயதுக் குழந்தையை, மர்ம நபர் கடத்த முயன்றுள்ள சம்பவம், மருத்துவமனையிலிருந்த பிற நோயாளிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.