உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக பெரிதும் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதர் நபியின் தியாகத்தை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12ஆவது மாதமான துல் ஹஜ்ஜின் 10ஆவது நாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் செய்வது. இவ்வாறு செய்து கொண்டாடுவதை பக்ரீத் என்கின்றனர். இதனை தமிழில் தியாகத் திருநாள் என்றும் அழைக்கின்றனர். இப்பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து மசூதிகளுக்கு சென்று ஆண்களும் பெண்களும் தனித்தனியே அணிவகுத்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால், தற்போது கரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமிய குடும்பத்தினர் தங்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அந்த வகையில் நாகர்கோவில் அருகே இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் இடலாக்குடியில் இஸ்லாமியர்கள் வீடுகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிவில் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க..."பக்ரீத் தினத்தில் மாடுகளை வெட்டக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை"- எஸ்.டி.பி.ஐ