காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் மாநிலம் வரை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, "கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு அந்தஸ்து மூலம் காஷ்மீர் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பிரதமர் மோடி. இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ராஜலட்சுமி முண்டா (45) கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல்வேறு மாநிலங்கள் வழியாக சுமார் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை தனது இருசக்கர வாகனத்தில் இந்த பயணத்தை தொடங்கி உள்ளார்.
அவரின் பயணம் வெற்றி பெற பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கள் ஏற்புடையது. தமிழக அரசியல் கட்சிகள் காஷ்மீர் விவகாரத்தை அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது. அம்மாநில மக்களின் நீண்டகால உரிமைகள் மீட்கப்பட்டது என்ற கோணத்தில்தான் அணுக வேண்டும்" என்றார்.