கன்னியாகுமரி: நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நில பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த அலுவலகத்தில் விதிகளை மீறி லஞ்சம் பெற்று கொண்டு முறை கேடாக பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜாண் பெஞ்சமின், ரமா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் மற்றும் காவலர்கள் நேற்று(அக்.26) மாலையில் திடீரென இடலாக்குடி பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருந்த பத்திரப்பதிவு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு வந்திருந்த பொதுமக்கள் இடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்வதற்காக இருந்த பொது மக்களை காவல் துறையினர் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பத்திரபதிவு செய்வதற்காக காத்திருந்த பொதுமக்கள் சோதனைக்குப் பின்னரே பணிகள் தொடங்கும் என்பதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
தொடர்ந்து சார்பதிவாளராக பொறுப்பில் இருந்த ஆன்றோ மெஸ்மால் அறை மற்றும் அவரது இருசக்கர வாகனத்திலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தின் பெட்டியில், இரு தனி நபர்களின் பெயர்கள் எழுதப்பட்ட 2 கவர்களில், தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரம் ரூபாய் இருந்ததை கைப்பற்றினர்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், அலுவலகத்தில் இருந்த அனைத்து ஊழியர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது 28 வயதான கேமரா ஆபரேட்டர் ரெஜினா என்பவர் மேஜையில் 2 ஆயிரத்து 900-ம் ரூபாயும், இளநிலை உதவியாளர் 28 வயதான ரேஷ்மா என்பவர் மேஜையில் இருந்த கோப்புகளுக்கு இடையே 7,600 ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்ததையும் கைப்பற்றினர்.
மேலும் பத்திர பதிவுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு பணம் வைத்து இருந்ததாக சந்தேகத்தின் அடிபடையில் பத்திர எழுத்து அலுவலக ஊழியர்களான 35 வயது விக்னேஷ் மற்றொரு நபரான 38 வயது விக்னேஷ் ஆகியோரிடம் இருந்து 5 ஆயிரத்து 650 ரூபாயும், முதியவர் ஒருவரிடம் இருந்து 45 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத பணம் மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 150 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
இந்த பணத்திற்கு மேற்கண்ட 6 பேரும் எந்த கணக்கும் சொல்ல வில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆன்றோ மெஸ்மால் நாகர்கோவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இடலாக்குடி சார்பதிவாளர் விடுப்பில் சென்று இருந்ததால் நேற்று பொறுப்பு சார்பதிவாளராக பணியில் இருந்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையால் இடலாக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி, குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளும் திடீரென அரசு துறைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு: ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டுக்கு சிசிடிவி காட்சிகளுடன் டிஜிபி விளக்கம்!