கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் சான்றோர் சங்கமம் என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் நிகழ்ச்சியை தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் கௌதமன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வன்மையாக கண்டனத்திற்குரியது. இந்தியா தனி தேசம் அல்ல. அது பல இறையாண்மையை கொண்ட தேசிய இனங்களை உள்ளடக்கியதாகும். எனவே அமித்ஷா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் திணிக்கப்படுகிறார்கள், அதன் நோக்கம் தமிழர்களை தமிழ் நாட்டில் சிறுபான்மை இனமாக மாற்றும் முயற்சி. ஒரே நாடு, ஒரே ரேஷன் என்பது தமிழ்நாட்டிற்கு பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.
சென்னையில், பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த நிகழ்வு ஒரு படுகொலை. மேலும் உயர் நீதிமன்றம் பதாகைகள் குறித்து கருத்து தெரிவித்த பின்னரும்கூட அதிமுகவினர் தொடர்ந்து பதாகைகள் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சுபஸ்ரீ இறந்தது குறித்து தமிழ்நாடு அமைச்சர்களின் பேச்சு மிகவும் கீழ்த்தரமான, அநாகரிகமான பேச்சுகள்” என்றார்.