கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மார்ச் 07) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதற்காக இன்று (மார்ச் 07) காலை திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வந்த அவர், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் வீடு வீடாக சென்று மோடி அரசின் சாதனைத் திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வாக்குகள் சேகரித்தார்.
இதனையடுத்து, செட்டிகுளம் சந்திப்பு முதல் வேப்பமூடு காமராஜர் சிலை வரை திறந்த வாகனத்தில் நின்றபடி, பரப்புரையில் ஈடுபட்ட அவருக்கு, பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். அப்போது, பாதுகாப்புக்காக காவல் துறையினர் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு வருமாறு, அமித் ஷா சைகை செய்ததால் தொண்டர்கள் அதை அகற்றி விட்டு அவரின் வாகனத்தைச் சூழ்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் காவல் துறையினரின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டது.
பின்னர், அப்பகுதியிலிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பாஜக தலைவர் வேல்முருகன், மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.டி. ரவி, உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து தொண்டர்களிடமிருந்து விடைபெற்ற அவர், வடசேரி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள உடுப்பி ஹோட்டலில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: 'வெற்றிக் கொடியை ஏந்தி வெல்வோம்' பரப்புரைக்கு வந்த அமித் ஷாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு