கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலிலிருந்து காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
இந்நிலையில் சிறிது நேரம் கழித்து பரப்புரைக்காக விஜய் வசந்தை எங்கே அழைத்துச் செல்வது என்பதில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் கட்சித் தொண்டர்கள் இரு தரப்பாகப் பிரிந்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இவ்வாறு காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் சிறுபிள்ளைகள்போல் மோதிக்கொண்டது காண்போருக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் வசந்த் பரப்புரை வாகனத்தில் இருந்தபடியே தொண்டர்களைச் சமாதானப்படுத்தினார். அதன் பின்னர் பரப்புரை ஊர்வலம் சுசீந்திரம் காவல் நிலையம் அடுத்த நல்லூர் அருகில் உள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையத்திற்குச் சென்றது. அப்போது தேர்தல் ஆணையம் அனுமதித்த எண்ணிக்கையைவிட அதிகமான வாகனங்களில் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தொண்டர்களின் வாகன எண்களை குறிப்பு எடுத்துக்கொண்டு, அனைத்து வாகனங்களுக்கும் இலவசமாக பெட்ரோல் நிரப்பக் கூறிக்கொண்டிருந்தார். தொண்டர்களின் வாகனங்களில் நிரப்பப்பட்ட பெட்ரோலுக்கான பணம், காங்கிரஸ் வேட்பாளரின் கணக்கில் வரவுவைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகச் செலவழிப்பது, அதிகக் கூட்டம் கூட்டுவது போன்ற காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க : கரோனா நிலவரம்: நாட்டில் ஒரே நாளில் 354 உயிரிழப்புகள்