கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியின் குரு பாலபிரஜாபதி அடிகளார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகப் பொதுமறை நூலான திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர். இவருக்கு மதச்சாயம் பூசும் முயற்சி நடந்திருப்பது சரியானது அல்ல. ஒரு மதத்துக்குள் திருவள்ளுவரை கொண்டுவருவது தேவையற்ற செயல். அரசியல் லாபத்துக்காகவும் விளம்பரம் தேடும் நோக்கத்துடனும் இந்தச் செயலை மேற்கொண்டவர்களை தமிழ்நாடு அரசு கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனி, இதுபோன்ற ஒரு தமிழறிஞரை அவமதிக்கும் நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்ந்தால், செயல்படாத நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளதாக சந்தேகம் எழும். திருவள்ளுவரை அவமதித்த செயல், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தை அவமானப்படுத்தி, கேலி கூத்தாக்கியதற்குச் சமம்" என்றார்.