கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சாப்பிங் கம்பளக்ஸ், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் என மக்கள் கூடும் இடங்களில் இந்த வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுதொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாகர்கோவிலில் அருகே உள்ள அனந்தன் நாடார்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர், மெர்லின் ஜெயபால் என்பவரது மனைவி சுனிதா. இவர், அம்மாண்டிவிளை பகுதியில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சுனிதா வேலைக்குச் செல்வதற்காக பருத்திவிளை சந்திப்பில் இருந்து அம்மாண்டிவிளைக்குச் செல்லும் பேருந்தில் பயணம் செய்தார்.
அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி யாரோ அவரது கழுத்தில் இருந்த 7 சவரன் நகையை திருடிச்சென்றனர். இது குறித்து சுனிதா ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர். இதில், சந்தேகத்தின் அடிப்படையில் சில பெண்கள் அங்குமிங்குமாக அடிக்கடி சுற்றித்திரிவது தெரியவந்தது.
இந்நிலையில் ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளர் காந்திமதி தலைமையில் காவல் துறையினர் ஆலங்கோட்டை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவில் 3 பெண்கள் இருந்தனர். கண்காணிப்புக் கேமராவில் பதிவான பெண்கள் தான் அவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். உடனே சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி பிரியா என்ற தேவானை (29), மைக்கேல் மனைவி நதியா என்ற மாரீஸ்வரி (24) மற்றும் குமார் மனைவி பிரியா என்ற ஈஸ்வரி (25) என்பதும் அவர்கள் 3 பேரும் பேருந்தில் பயணம் செய்த சுனிதாவிடம் 7 சவரன் நகையை திருடியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் 3 பேரை கைது செய்தனர். மேலும், கைதான 3 பேரும் சேர்ந்து வேறு ஏதாவது நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என விசாரணை நடந்தி வருகின்றனர். இந்நிலையில் தக்கலை அருகே ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி விட்டு தப்ப முயன்ற பெண்ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பெண்ணை கைது செய்த தக்கலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்க முயன்ற 4 பெண்கள் கைது