காஞ்சிபுரம் மாவட்டம் களியப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தச் செயலுக்கு பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் கந்தன் தலைமையில் காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், அந்தோனிதாஸ் உள்ளிட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் சிலையை உடைத்தவர்கள் யார் என்று சாலவாக்கம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தந்தை பெரியாரின் சிலையை சேதமாக்கிய சமூக விரோதிகளைக் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திராவிடர் கழகத்தினரும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில், சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அவர்களிடம் சிவகாஞ்சி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் டேவிட், காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் திருமாதாசன் , மாவட்ட ஊடக மைய செய்தியாளர் மதி ஆதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்