காஞ்சிபுரம்: பல்லவர்மேடு அடுத்த புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபா என்கிற பிரபாகரன்(35). இவர் மீது பல காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், அடிதடி, கொலை முயற்சி உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் கேட்பது, கஞ்சா விற்பனை போன்றவற்றிலும் இவரும் இவரது கூட்டாளிகளும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (டிச.26) பட்டப்பகலில் காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், பிரபாகரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
ஒரு குற்ற வழக்கு தொடர்பாக, காவல் நிலையத்தில் சென்று கையொப்பமிட்ட சென்று கொண்டிருந்த பிரபாகரனை, உடலின் பல பாகங்களில் கத்தியால் பயங்கரமாக வெட்டி அந்தக் கும்பல் படுகொலை செய்தது. இசசம்பவம் நடந்த இடத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை ஆகியோர் வந்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் ஆய்வு செய்தனர். அதன் பிறகு, அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில், காரில் வந்த நான்கு மர்ம நபர்கள் பிரபாகரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக பிரபாகரனால் கொல்லப்பட்ட தேமுதிக பிரமுகர் சரவணனின் தம்பி ரகு மற்றும் அவரது நண்பர்கள் என்று தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களைப் பிடிக்க ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ரகு என்கிற ரகுவரன் கருப்பு பாட்ஷா என்கிற உசேன் ஆகியோரை இன்று (டிச.27) கைது செய்த போலீசார், அவர்களை விசாரணைக்கு அழைத்து வந்தனர். அப்போது இரண்டு பேரும் போலீசாரை தாக்கி விட்டு, தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. எனவே, போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ரகு மற்றும் உசேன் ஆகிய இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தின் போது ரவுடிகள் இரண்டு போலீசார் தாக்கியதில் காயமடைந்த 2 போலீசார் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரபல ரவுடி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் இரண்டு கொலையாளிகளை போலீசார் என்கவுண்டர் செய்ததும் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உயிருக்குப் போராடிய காட்டெருமை.. உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்த வனத்துறையினர்.. தென்காசியில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்..!