காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நிலம் எடுப்பு பணிகளை செய்துள்ளது.
பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க எடுக்கப்பட்ட நிலங்களுக்கு, இழப்பீடாக 200 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது என்றும், நிலத்தின் உரிமையாளர்கள் பலபேர் அரசின் அனாதீனம், மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை பொய்யான ஆவணங்கள் சமர்ப்பித்து, பட்டா மாற்றி இழப்பீட்டுத் தொகையை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
நில எடுப்பு இழப்பீடு மோசடி குறித்து பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளரான நவகோடி நாராயணன் என்பவர் தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையருக்கு புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நில நிர்வாக ஆணையர், இது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விவகாரம் என்பதால் இந்த புகாரை சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்தார். இந்நிலையில், 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதால், அப்போது தேசிய நெடுஞ்சாலைகளுக்கான நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த நர்மதா உள்ளிட்ட ஐந்து அலுவலர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர், நவகோடி நாராயணனை 2ஆவது முறையாக காஞ்சிபுரத்திற்கு வரவழைத்து நேற்று (ஜுன் 17) விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஆஜரான புகார்தாரர் நவகோடி நாராயணன் தன் தரப்பு ஆதாரங்களையும், ஆவணங்களையும் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக நில அபகரிப்பு பிரிவு காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருவதால் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: நிலத்தை அதன் உரிமையாளருக்கு போலி ஆவணம் தயார்செய்து விற்க முயற்சி!