செங்கல்பட்டு மாவட்டம் நகர காவல்நிலையத்திற்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் மளிகைகடை நடத்தி வருவர் கமருதீன். சுன்னாம்பு காரத்தெருவில் இவருக்கு செந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்கள் இரவு தங்களது வீட்டில் உறங்கி கொண்டிருக்கையில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.
இரவில் கதவை தட்டியதால் ரவிசந்திரன் கதவை திறக்கமால் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு காவல்துறையினர் என்று கொள்ளையர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் ரவிசந்திரன் கதவை திறக்கவில்லை.
இதனால் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் வீடு புகுந்து பணம் நகை எவ்வளவு வைத்திருக்கிறாய் எடு என கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். ரவிச்சந்திரன் மிகவும் ஏழ்மையானவர் என்பதால் என்னிடம் பணமும் இல்லை நகையும் இல்லை என எடுத்துச் சொல்லியும் கேட்காத மர்மநபர்கள் ரவிச்சந்திரன் மற்றும் சித்ராவை கத்தியால் பலமாக வெட்டி தாக்கியுள்ளனர். நீண்ட நேரம் போராடி தன்னையும் தன் மனைவியையும் காப்பாற்றி கொண்டுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனது வீட்டு உரிமையாளர் கமருதீனிடம் நள்ளிரவே ரவிசந்திரன் கூறியுள்ளார். அதற்கு அவர் என்னால் வரமுடியாது என்ன நடந்தாலும் நீயேதான் பார்த்து கொள்ள வேண்டும் என பதிலளித்துள்ளார்.
பின் ரவிசந்திரனும் அவரது மனைவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ரவிசந்திரன் செங்கல்பட்டு நகர காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.