காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்தி வரதரை தரிசிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து மக்கள் குவிகின்றனர். குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளி இன்றுடன் 44 நாட்கள் ஆகிறது. இந்த மாதம் 17ஆம் தேதியன்று அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்கவுள்ளனர். இன்னும் 4 நாட்களே இந்த வைபவம் நடைபெற உள்ள நிலையில், ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் அத்தி வரதரை தரிசிக்க திடீரென சென்றனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு அத்தி வரதரின் புகைப்படம் அளிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடத்தில் அத்தி வரதரை தரிசித்துவிட்டு தன் மனைவி, ரசிகர்மன்ற பிரமுகர்கள் ஆகியோருடன் ரஜினிகாந்த் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவரது வருகையை முன்னிட்டு ஐஜி சாரங்கன், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி .கண்ணன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.