செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்துள்ள பொலம்பாக்கம் கிராமத்தில் டிவிஎஸ் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதில் சிகிச்சைப் பெற்று வந்த தொழிலாளர் ஒருவர், நோய்த்தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழிற்சாலையை தற்காலிகமாக மூடக்கோரி அந்நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் கரோனா வைரஸ் ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை, உரிய நிவாரணம் வழங்கவில்லை எனத் தொழிலாளர்களிடையே குற்றச்சாட்டு இருந்து வந்தது.
ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, தொழிற்சாலையும் வழக்கம் போல் செயல்பட்டு வந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் குடும்பத்தினர், இந்திய ஜனநாயக இளைஞர்கள் சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் அத்தொழிற்சாலை வளாகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தாமூர் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ததோடு, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.