காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பேருந்து நிலையத்திற்கு செல்லக்கூடிய பெங்களூரு பிரதான சாலையில் நெடுஞ்சாலை துறையினர் தடுப்பு சுவர் அமைத்து வருகின்றனர். இந்த சாலையை ஒட்டி 100 அடி பாசன கால்வாய் செல்கிறது. ஒரகடம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்தக் கால்வாய் வழியாக சென்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்வது வழக்கம்.
அதிக அளவில் மழை பெய்யும் பொழுது இந்த கால்வாய் நிரம்பி இந்த சாலைக்கு மேலாக வெள்ள நீர் பாய்ந்து செல்லும், தற்போது இந்த சாலை நடுவே தடுப்பு சுவர் அமைத்தால் கால்வாயில் வெளியேறும் வெள்ளநீர் அருகே இருக்கக்கூடிய செல்லப்பெருமாள்நகர், டாக்டர் விஜயம் டவுன்ஷிப், பள்ளி குடியிருப்பு போன்ற பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே சுவர் கட்டுவதை நிறுத்த வேண்டும் அல்லது வெள்ள நீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்காரணமாக ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலர் மகேஷ்வரன் இடத்தில் (JE) மனு கொடுத்தபோது பொதுமக்களிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொள்ளாமல் அவமானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான பொதுமக்கள் அரசு கவனம் செலுத்தி தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி பொதுமக்களை அவமானப்படுத்திய ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலர் மகேஸ்வரன்(JE) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.