நாமக்கல் மாவட்ட காவல் துறையினர், காஞ்சிபுரத்தில் 01.07.2019 முதல் 17.08.2019 வரை நடைபெற்ற அத்திவரதர் வைபவத்திற்கு பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா, இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சேலம் சரகக் காவல் துறைத் துணைத் தலைவர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட மாநில மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலம்-சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர், அத்திவரதர் வைபவத்திற்கு பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக, நாமக்கல் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 483 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாநில மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, "காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அத்திவரதர் விழாவின்போது தினந்தோறும் 5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மழை, வெயில் என பாராமல் கடுமையாக உழைத்த தமிழ்நாடு காவல் துறையினர் அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கினார்கள்.
எப்போதும் தமிழ்நாடு காவல்துறை முதன்மையான துறையாகத் திகழ்கிறது. தமிழ்நாடு அரசு, அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து வரும் பணியாளர்களை ஊக்குவித்தும் கௌரவப்படுத்தியும் வருகிறது" என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருளரசு, சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு!