உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் உமாகாந்த்(39). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அமராவதிப்பட்டினத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் தொழிற்சாலையின் உள்ளேயே தங்கி பணிக்குச் சென்று வந்தார்.
இந்நிலையில், இன்று (பிப். 10) மாலை பணி முடிந்த நிலையில், உமாகாந்த் தனது சக தொழிலாளர்கள் நான்கு பேருடன் அருகாமையிலுள்ள 12 அடி ஆழ குட்டையில் கை, கால்களை கழுவ சென்றார். அப்போது, திடீரென கால் வழுக்கி உமாகாந்த் குட்டையில் விழுந்துள்ளார்.
அவருடன் சென்ற சக தொழிலாளர்கள் யாருக்கும் நீச்சல் தெரியாததால், உயிருக்கு போராடிய உமாகாந்தை மீட்கப்பட முடியாத நிலையில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து உத்திரமேரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குட்டையிலிருந்து உமகாந்த்தின் சடலத்தை மீட்டனர்.
பின்னர் தகவலறிந்த காவல் துறையினர் உமாகாந்த்தின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு மதூர் கல்குவாரியில் மண் சரிவு ஏற்பட்டு வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே வடமாநிலங்களில் இருந்து வேலைக்காக வரும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: சீர்காழியில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு!