காஞ்சிபுரம்: ஓரிக்கை அடுத்த குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் எனப்படும் பட்டாசு உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு திருவிழாவிற்கான பட்டாசுகள் உள்ளிட்ட பலவித பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் இந்த குடோனில் 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இந்த பட்டாசு குடோனில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் இந்த வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தின் போது சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இதுவரையில் சுமார் 10த்திற்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு தீக்காயங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் அதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில் 2 பெண் உட்பட 6 பேர் இந்த வெடி விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வெடி விபத்து குறித்து மாகரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெடி விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வெடி விபத்து தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி கூறுகையில், ''காஞ்சிபுரம் மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்ட பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 24 நபர்கள் பாதிக்கப்பட்டு, இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து நபர் சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
13 நபர்கள் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு குடோனுக்கு 2024 வரை அனுமதி வாங்கியுள்ளனர். பட்டாசு குடோன்களுக்கு வழங்கப்படும் லைசென்ஸ் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்பு தான் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வெடி விபத்து நடந்த பட்டாசு குடோனில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என காவல்துறை விசாரணையில் தான் தெரிய வரும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் - ஓபிஎஸ் வாதம்