காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டமானது நேற்று(ஜன.7)நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மனித வள மேம்பாட்டு அலுவலரகளின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
பின்னர் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம் சுதாகர், “நமது மாவட்டத்தில் அதிகளவு தொழிற்சாலைகளில் பெண்கள் வேலை பார்ப்பதால் அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தொழிற்சாலைப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். தொழிற்சாலை இயக்குவதில் யாரேனும் இடையூறு செய்தால் அவர்கள் குறித்த புகார்களை உடனடியாக மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.
எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்
அதன் பின் பேசிய மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, “தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். அதில் எந்தவித குறைபாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம், தொழிற்சாலைகளிலிருந்து அகற்றப்படும் திட மற்றும் திரவக் கழிவுகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களை கண்காணிக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் இதுவரை 20 தொழிற்சாலைகள் மீது சுற்றுச்சூழல் பாதிப்பு என அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் எந்த ஒரு திட கழிவுகளையும் கொட்டுதல், திரவ கழிவுநீரை விடக்கூடாது. அப்படி ஏதேனும் புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதனை உறுதி செய்யும் அளவில் ஒப்பந்ததாரர்களை தொழிற்சாலை நிர்வாகம் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர், தொழிற்சாலை மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Covid Guidelines: காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகள்