காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 10 மாதங்களாக நடைபெறாமல் இருந்தது. கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததையடுத்து, ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தொடங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பத்து மாதங்களுக்குப் பிறகு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் என்பதால், அதிகளவிலான பொதுமக்கள் வருகை தந்தனர்.
கரோனா தொற்று பரவாமல் இருக்க வளாகங்கள் முழுவதும் முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டும், தகுந்த இடைவெளி கடைபிடிப்பது போன்ற அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.