காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 500 ஆண்டுகால பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் திருப்பணி மேற்கொள்ளும்போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் உள்ளிட்டவைகள் கிடைக்கப்பெற்றன.
இது குறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் நேற்று (டிச. 12) இரவு கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டபோது ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
அதன்பேரில் இன்று (டிச. 13) காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா தலைமையில் வருவாய்த் துறையினர் காவலர்கள் உதவியுடன் உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கிடைத்த நகைகளை மீட்பதற்காக சென்றபோது, அவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் ஊர் பெரியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தினர். இதன்பேரில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா ஊர் பெரியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்னும் ஒரு மணி நேரத்தில் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து நகைகளையும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால் காவல் துறை மூலம் நகைகள் கைப்பற்றப்படும் என வருவாய் கோட்டாட்சியர், கிராம மக்களிடம் எச்சரிக்கைவிடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதையும் படிங்க: நகைக்காக 90 வயது மூதாட்டி கொலை