விபத்தில் உயிரிழப்பவர்கள் முதல் கொலை, தற்கொலை என சந்தேக மரணம் வரை உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்படுவது வழக்கம். இதுபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவாச்சத்திரம், ஒரகடம் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடலை உடற்கூராய்வு செய்வற்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைப்பது வழக்கம்.
உடற்கூராய்வு செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர்:
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை பிணவறையில் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர் டில்லிபாபு என்பவர் உயிரிழந்த ஒருவரின் உடலை உடற்கூராய்வு செய்ய 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு பணத்தை பெறும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்:
அந்த வீடியோவில் பணத்தை பெறும் ஊழியர், ‘இந்த பணம் எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்’ என கூறியிருப்பதும் பதிவாகியிருந்தது. எனவே வாங்கும் பணம் அந்த பணியாளர்களுக்கு மட்டும்தானா அல்லது ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கூட்டுக்கொள்ளை நடைபெறுகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபட்ட ஊழியர், அதன் பின்னணியிலுள்ள நபர்கள் யார் என்பதை அறிந்து அவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம்! பட்டியல் வெளியிட்ட கமல்!