காஞ்சிபுரம்: ஆங்கிலப் புத்தாண்டு நாளில் வழிபாட்டுக்காக நள்ளிரவு 12 மணிக்குத் திறக்கப்படும் கோயில்கள், நடைமுறைகளை மாற்றாமல் இந்த ஆண்டும் வழக்கம்போல திறக்கப்படுமென்றும், பக்தர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்யலாமென்றும் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சேகர்பாபு காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் ஆய்வுசெய்ய வருகைதந்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்பு காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் பகுதியில் ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுலா வளர்ச்சித் துறையின் மூலம் இரண்டு கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் வாகன நிறுத்தங்களுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதியைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
ஆங்கிலப் புத்தாண்டு தரிசனங்களுக்குத் தடையில்லை
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த சேகர்பாபு, "தமிழ்நாட்டில் ஆங்கிலப் புத்தாண்டு நாளில் வழிபாட்டுக்காக நள்ளிரவு 12 மணிக்குத் திறக்கப்படும் கோயில்கள், நடைமுறைகளை மாற்றாமல் இந்த ஆண்டும் வழக்கம்போல திறக்கப்படும். பக்தர்கள் நோய் பரவாமல், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஒரே நேரத்தில் குவியாமல் சாமி தரிசனம் செய்யலாம்.
ஆன்மிகவாதிகள் மலர்ச்சியோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்றும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்நாடு முதலமைச்சர் உறுதுணையாக இருப்பார். நிச்சயம் எங்களுடைய தாரக மந்திரம் திருக்கோயிலுக்குச் சொந்தமாக வருகின்ற வருமானங்கள் திருக்கோயிலுக்குச் சென்றடைய வேண்டும்.
அந்த வருமானங்கள் வாயிலாகத் திருப்பணிகள் நடைபெற வேண்டும். திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்; இதுதான் தமிழ்நாடு முதலமைச்சருடைய உத்தரவு.
ஆன்மிகத்துக்கு எதிரான இயக்கம் என்ற கருத்து மாறும்
ஆன்மிகத்துக்கு எதிரான இயக்கம் என்பதை இன்றைய ஆட்சி தகர்த்தெறியும், திமுக அனைவருக்கும் பொதுவான ஆட்சி என்பதை நிலைநிறுத்தும். திருக்கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் உடைய குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு 110 அறிக்கையில் சொன்னதுபோல ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பணி செய்கிறவர்களை திருக்கோயிலுடைய சட்டத்திற்குள்பட்டு அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரால் அந்தப் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுரு, காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் க. சுந்தர்,சி.வி.எம்.பி. எழிலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு!