காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் படப்பை பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் அலுவலர்கள் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சோதனை நடத்த முடிவெடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை. மாவட்ட தணிக்கை குழு அலுவலர் சுமதியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி லவக்குமார் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 10க்கும் மேற்பட்ட குழுவினர், காஞ்சிபுரம் மாவட்ட தணிக்கை குழு அலுவலர் சுமதியுடன் இணைந்து குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அதில், அலுவலகத்தில் பணியாற்றும் ஜான் ஆண்டனி என்பவரிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஜான் ஆண்டனி, அரசால் நியமிக்கப்பட்ட அரசு பணியாளர் இல்லை என்றும் இவர் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஜான் ஆண்டனியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் வரைபட அனுமதிக்காக வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி அதை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.