காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு நியாய விலைக் கடையில் கூட்டுறவுத் துறை சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனோ சிறப்பு நிவாரண நிதியின் இரண்டாவது தவணை 2000 ரூபாய், 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மூன்று லட்சத்து 66 ஆயிரத்து 347 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனோ சிறப்பு நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2000 ரூபாய், 17 கோடியே மூன்று லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தார்.
மேலும் குடும்ப அட்டையில்லா நலவாரிய அட்டை வைத்துள்ள 30 திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தலா ரூ.2000 வழங்கினார்.
அதைத்தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதியிதவி பெறும் திட்டத்தின்கீழ் 300 பயனாளிகளுக்கு ரூ.78.25 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவியும், ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் 2 கிலோ 4 கிராம் தாலிக்கு தங்கத்தையும் அவர் வழங்கினார்.
மேலும் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் திட்டத்தின்கீழ் 52 பயனாளிகளுக்கு இலவச மின் மோட்டார் வசதியுடன்கூடிய தையல் இயந்திரங்களையும் அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் ஜி. செல்வம், உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க. சுந்தர், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்பட அரசுத் துறை அலுவலர்கள், பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.