உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று (டிச.25) தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிறுஸ்துவ ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு, கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பிரார்த்தனையில் இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக குறைந்தளவே கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தகுந்த இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்தவாறு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:
அந்த வகையில் காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் அமைந்துள்ள தூய இதய அன்னை ஆலயத்தில் சகோதரத்துவத்தை வலியுறுத்தியும்,
கரோனா காலங்களில் பணியாற்றிய முன்களப்பணியாளர்களும் விவசாயிகளும் நலமுடன் இருக்கவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான கிறிஸ்துவர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக ஒன்றிணைந்து கலந்து கொண்டு சகோதரத்துவத்தை வலியுறுத்தி, இயேசு கிறுஸ்துவிடம் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மனித நேயம், கருணை, அன்பு ,சகோதரத்துவம் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் விதமாக கிறிஸ்துவர்கள் கிறுஸ்துமஸ் தினத்தினை கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழுப்புரத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:
விழுப்புரம் நகரின் மிகவும் பழமைவாய்ந்த தேவாலயமாக கருதப்படும் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இயேசு பிறந்த தினமான இன்று (டிச.25) சிறப்பு கூட்டு பிரார்த்தனை இரவு 12 மணிக்கு தொடங்கியது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கூட்டு பிரார்த்தனையில் பங்கெடுக்க வந்தவர்களிடம் தேவாலய நிர்வாகம் சார்பில் சானிடைசர், முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
புத்தாடைகள் அணிந்து ஆலயத்திற்கு வந்த கிறிஸ்துவர்கள் அனைவரும் குடும்பத்தோடு உற்சாகத்துடன் இந்த கிறிஸ்துமஸ் விழா கூட்டத்தில் பங்கேற்று, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
திருவள்ளூரில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்:
திருவள்ளூர் அருகே மணவாளநகரிலுள்ள அற்புத ஜெபகோபுர தேவாலயத்தில், நள்ளிரவு 12 மணி முதல் விடிய விடிய சிறப்புப் பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இவ்விழாவை முன்னிட்டு தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் திருவள்ளூரிலுள்ள சி.எஸ்.ஐ. இ.சி.ஐ, பெந்தகொஸ்தே தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் ஒவ்வொரு தேவாலயத்திலும் ஏசுபோல் வேடமணிந்து ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்துக் காட்டினர்.
இதேபோல், மாவட்டத்தில் ஈக்காடு, பூண்டி, புல்லரம்பாக்கம், ஈக்காடு கண்டிகை, கடம்பத்தூர், பேரம்பாக்கம், பூந்தமல்லி, பொன்னேரி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்பட பல பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர், நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: 3டி மணல் கலை மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து!