கரோனா தொற்றை உலகப் பெருந்தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இதன் பரவலைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனினும் இத்தொற்று உலகமெங்கும் வேகமாகப் பரவி இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி, ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. நமது நாட்டில் இப்பெருந்தொற்றினால் இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதற்கு முக்கிய காரணியாக சொல்லப்படுவது நோய்த் தொற்று கண்டறிவதில் ஏற்படும் காலதாமதம், பரிசோதனை செய்ய பயன்படும் சோதனை கிட்களின் பற்றாக்குறை.
சில நாள்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்துவரும் ரேபிட் கிட்களை கொண்டு செய்யப்பட்டுள்ள பரிசோதனை முடிவுகளின் துல்லியத்தன்மை குறித்து பல மாநில சுகாதாரத்துறையினர் சந்தேக கேள்வி எழுப்பியுள்ள நிலையில் ஐ.சி.எம்.ஆர், அடுத்துவரும் இரு நாட்களுக்கு ரேபிட் கிட்களின் மூலம் பரிசோதனை செய்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது.
கரோனா எனும் பெருந்தொற்று, கத்தியின்றி ரத்தமின்றி மனித சமூகத்திடம் ஒரு பெரும் யுத்தம் நடத்திவரும் சூழ்நிலையில், அதன் வழியிலேயே ரத்தம், சளி போன்றவற்றின் அவசியமின்றி எக்ஸ்ரே ஒளிபடங்களின் துணைகொண்டு எளிதாக கரோனா தொற்றை கண்டறியும் ஒரு புதிய முயற்சியில் தனியார் கல்விக் குழுமத்தின் மருத்துவர் ஹரி சங்கர் மேகநாதன் தலைமையில் உயிரி மருத்துவ பொறியியல் துறை பேராசிரியர்கள் எஸ்.ராஜ் குமார், வி.சப்தகிரிவாசன், சிஎஸ்இ (கணிணி அறிவியல் பொறியியல்) துறையின் உதவி பேராசிரியர் வி.ராஜாராமன். மூன்றாம் ஆண்டு மாணவர் அஷ்வின் ரமேஷ் ஆகியோர் சாதித்துள்ளனர்.
குறிப்பாக, மருத்துவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கரோனாவை கண்டறிய திருப்புமுனை தரும் ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளை (Artificial intelligence tool) சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் பகுதியில் இயங்கிவரும் ராஜலட்சுமி கல்விக் குழுமத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
கோவிட்-19 வைரஸ் கண்டறிய தங்கள் குழு உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மருத்துவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்று ராஜலட்சுமி கல்விக் குழுவின் துணைத்தலைவரும் மென்பொருள் ஆராய்ச்சிக் குழுவின் தலைமை ஆராய்ச்சியாளருமான ரேடியாலஜிஸ்ட் மருத்துவர் ஹரி சங்கர் மேகநாதன் கூறுகிறார். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்த மென்பொருள் கோவிட்-19, சமூக தொற்று வாயிலான நிமோனியா, மார்பு எக்ஸ்ரேவை கொண்டு உடலின் நிலையை கண்டறிய முடியும்.
சுமார் பதினைந்தாயிரம் எக்ஸ்ரே ஒளிப்படங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட இச்சோதனை முறை 95.4 சதவீதம் துல்லியத்தன்மை கொண்டது. குறுகிய காலத்தில், இரவு பகலாக இந்த ஆராய்ச்சி பணியில் ஈடுபட்ட தங்கள் குழு இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அவர், எளிதில் பயன்படுத்தும், துல்லியமான இந்த மென்பொருளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும் இதன் மூலம் இந்த சமூகத்திற்கு உதவ தங்கள் குழுமம் ஆர்வத்துடன் உள்ளதாக கூறினார்.
இந்த மென்பொருள் குறித்த சிறப்பம்சங்கள்
- இன்ஸ்டலேஷன் அவசியமில்லை.
- இது ஒரு எளிமையான, எங்கிருந்தும் இயக்கக் கூடிய நடைமுறை
- சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதை போன்று எளிதில் பதிவேற்ற முடியும்
- பதிவிட்ட மறு நொடியில் முடிவை அறியலாம்
இந்த ஆராய்ச்சிக் குழுவில் பங்கேற்ற சிஎஸ்இ (கணிணி அறிவியல் பொறியியல்) துறை மூன்றாமாண்டு மாணவர் அஷ்வின் ரமேஷ் கூறுகையில், உலகிற்கே பேராபத்தாக இருக்கும் கோவிட்-19ஐ கண்டறியும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர்களில் தானும் ஒருவராக இருப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார். இதற்காக கல்விக் குழும நிர்வாகத்திற்கும் பேராசியர்களுக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக அவர் கூறினார்.