காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டை தனியாக பிரித்து, தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சத்யகோபால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்துகளை கேட்டறிந்தார். மேலும் இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள், திமுக முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளையும் 500க்கும் மேற்பட்ட மனுக்களையும் வழங்கினர்.
மேலும், 48 நாட்கள் தொடர்ந்து சிறப்பித்த அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் கூடிய விரைவில் அதற்கான பணிகள் ஆலோசித்து நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.