காஞ்சிபுரம்: தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அதிமுக இலக்கிய அணி சார்பாக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட இலக்கிய அணிசெயலாளர் பொன். முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாநில இலக்கிய அணி செயலாளரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இதன் பின்னர் பேசிய வைகைச்செல்வன், "இன்னும் ஓரிரு வருடங்களில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றும். அதற்கான சாதகமான சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பதிவாளர்களின் பதிப்புகள் இரவோடு இரவாக நீக்கப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவிக்கிறது. உடனடியாக அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், பாஜக கட்சி பிரமுகர்கள் பாலியல் வழக்குகளில் சிக்குவது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களின் உள்கட்சி விவகாரம். பள்ளிக்கல்வித்துறை சார்பாக வழங்கப்படும் 14 வகையான உபகரணங்களிலும் முன்னாள் முதலமைச்சரின் படம் இருந்தால் மட்டுமே, அது தற்போதைய முதலமைச்சரின் பெருந்தன்மையை காட்டும்" எனத் தெரிவித்தார்.