காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி கிராமத்தில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த செல்வம் என்பவர் செங்கல் சூளை நடத்திவருகிறார். இந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பலர் பணியாற்றி வருவதாகவும், அவர்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்காமல் செங்கல் சூளை உரிமையாளர் தடுத்து வருவதாகவும் காஞ்சிபுரம் சார் ஆட்சியருக்கு புகார் வந்தது.
இந்த புகாரின்பேரில் காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்த் துறையினர் செங்கல் சூளையில் ஆய்வு மேற்கொண்டபோது, திண்டிவனம் பகுதியை சேர்ந்த ஆறு குடும்பங்களின் 9 குழந்தைகள் உட்பட 21 பேர் கொத்தடிமைகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரையும் வருவாய்த் துறையினர் மீட்டனர்.
21 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த செங்கல் சூளை உரிமையாளர் மீது காவல் துறையினர் மூலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொத்தடிமை மீட்பு சான்றிதழ், அரசு சார்பில் நிதி உதவி ஆகியவை மீட்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.