கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த கிருஷ்ணவேணி, செவ்வந்தி ஆகியோர் மருத்துவராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினர்.
அதில் வெற்றி பெற்று அரசின் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் மூலம் நவம்பர் 19ஆம் தேதியன்று மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் கலந்துகொண்டனர்.
இதில் இவர்களுக்கு சுயநிதி கல்லூரியில் சீட் கிடைத்தது. ஆனால் இந்தக் கல்லூரியில் படிக்க நான்கு லட்சம் ரூபாயுடன் தங்கும் விடுதி கட்டணம் கட்ட வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை மாணவிகள் கட்ட முடியாமல் போனதால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர்.
நவம்பர் 21ஆம்தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு மூலம் சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களின் படிப்பு செலவை அரசை ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அரசு முன்கூட்டியே அறிவித்திருந்தால் தாங்கள் காத்திருப்பு பட்டியலில் இடம் பெற்றிருக்க மாட்டோம் என மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மாணவிகளிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசே கட்டண கொள்ளையில் ஈடுபடலாமா? - டாக்டர்கள் சங்கம் கண்டனம்