கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாவந்தூர் கிராமத்தில் வசித்து வருபவர், ராஜமாணிக்கம் (63). கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், நேற்று (டிச.16) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், “கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான எனக்கு லட்சுமி என்கிற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர்களில் 2 மகள்களுக்கு திருமணம் செய்து விட்டேன். மேலும் ஒரு மகள் திருப்பூரில் தங்கி தினக்கூலி வேலை பார்த்து வருகிறார். என்னுடைய மனைவியான லட்சுமி, பாவந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் ஊழியராக பணிபுரிகிறார்.
எனது மனைவி வேலைக்குச் செல்வது மட்டுமல்லாது, கண்பார்வையற்ற என்னை தினமும் அவர்தான் கவனித்து வந்தார். இந்த நிலையில் எனது மனைவி லட்சுமியை 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து வசதி இல்லாத சேரந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
எனவே என் மனைவியால் சேரந்தாங்கல் கிராமத்திற்கு தினசரி சென்று வர மிகவும் கடினமாக உள்ளது. ஆகவே என் சொந்த ஊரான பாவந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கே மீண்டும் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடுதி மாணவிகளிடம் பயிற்சியாளர் பாலியல் தொல்லை - நடவடிக்கை எடுக்கக்கோரி மாதர் சங்கத்தினர் மனு