ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றின் கரைப் பகுதியான வைராபாளையம், செங்கோட்டையன் நகர்ப்பகுதிகளில் அனுமதி பெற்று, மீன்களைப் பிடித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகளவில் வசித்துவருகின்றனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் கடந்த சில வாரங்களாக மீன்களும் அதிகளவில் கிடைப்பதால் மீனவர்கள் பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு மீன்களைப் பிடித்துவருகின்றனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்கிற இளைஞர் ஒருவர் இன்று (டிச. 01) அதிகாலை காவிரி ஆற்றில் மீன்களைப் பிடிப்பதற்குத் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட வெடிமருந்தான டெட்டனேட்டரைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிக்க முயற்சித்துள்ளார்.
ஆனால், அவர் பரிசலிலிருந்து டெட்டனேட்டரை ஆற்றில் வீசுவதற்கு முன்னதாகவே தவறுதலாக அது வெடித்தது. இதில் வசந்தகுமாரின் இரண்டு கைகளும் துண்டாகின. வெடிச்சத்தத்தைக் கேட்ட அருகிலிருந்த மீனவர்கள் உடனடியாக வசந்தகுமாரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் காவல் துறையினர், அப்பகுதி மீனவர்களிடம் தடைசெய்யப்பட்ட வெடிமருந்துகள் இருப்பது குறித்து சோதனை நடத்திவருகின்றனர். மேலும், தடைசெய்யப்பட்ட வெடிமருந்தைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது!