கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பொதுமுடக்கம் அமலில் உள்ள போதும் காலை 6 மணிமுதல் காலை 9 மணி வரை மதுபான கடைகள் திறக்கப்படுவதால் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநில மதுபானங்கள் காய்கறி வாகனங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கடத்திக்கொண்டு வரப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தாளவாடி மலைப்பகுதி, ஆசனூர் வழியாக மதுபான கடத்தலைத் தடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் சத்தியமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் நேற்று இரவு காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாடு நோக்கி வந்த தக்காளி உள்ளிட்ட காய்கறி வாகனங்களைச் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி மதுபானங்கள் கடத்தப்படுகின்றனவா எனச் சோதனையிடப்பட்டு பின்னர் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டன.
காய்கறி வாகனங்களில் மதுபான கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.