ஈரோடு: பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், 2021 - 2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, இலவச பாட புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் கூறியிருந்தார். அதன்படி திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது, எவ்வளவு காலத்திற்குள் முடிப்பது குறித்து ஆலோசிக்க வருகிற வெள்ளிக்கிழமை (ஜுலை 2) ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது.
திமுகவினர் கரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். வீட்டுவசதி துறை சார்பில் நிறைய திட்டங்களை ஆலோசித்து வைத்துள்ளோம். வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதனை அறிவிக்க உள்ளோம்.
கட்டுமான பொருட்களின் விலையை குறைப்பதற்கு தொழில்துறை அமைச்சர் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா, ஆட்சியர் கிருஷ்ணணுண்ணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அண்ணா வழியில் பீடு நடைபோடும் ஆட்சி' - காஞ்சித்தலைவர் இல்லத்தில் உறுதிஏற்ற ஸ்டாலின்