ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசுப் பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. பேருந்து கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் என்ற இடத்தில் சென்ற போது எதிரே சுண்ணாம்பு பாரம் ஏற்றி வந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், மோதிய வேகத்தில் வேன் பேருந்தின் அடியில் சிக்கியது.
இதில் வேன் ஓட்டுநர் சபரி உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து நிகழ்ந்த போது பேருந்துக்கு பின்னால் வந்த லாரி பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர் விக்னேஷ்வரன், நடத்துநர் லட்சுமிகாந்தன், பேருந்துவில் பயணம் மேற்கொண்ட 5 பெண்கள், வேனில் பயணம் செய்த பிகார் மாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பேருந்தின் அடியில் இருந்த வேன் இடிபாடுகளுக்கிடையே பிகார் மாநில இளைஞர் மோகன்தாஸ் என்ற லோடு மேன் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி மோகன்தாஸை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வேனை ஓட்டி வந்த சபரி பள்ளிப்படிப்பை முடித்த பின் வேன் ஓட்டி பழகி வந்துள்ளார் என்பதும் வேனை ஓட்டி பழகிய சில நாள்களில் தனியாகவே லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனத்தை இயக்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தினால் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.