நம்மில் பலருக்கும் புது வீடு, புது கார் வாங்குவது என்பன தான் வாழ்நாள் கனவாக இருக்கும். ஆனால் அது அவ்வளவு எளிதாக சாத்தியமாவதில்லை. நடுத்தர குடும்பங்களைப் பொறுத்தவரையில் கார் வாங்கிட வேண்டும் என்ற ஆசையில் கடின உழைப்பால் ஈட்டிய பணத்துடன் சேர்த்து ஈஎம்ஐ (EMI) மூலம் புதிய கார் வாங்கி விடுவார்கள்.
ஆனால் அதற்கு வட்டி கட்டி வட்டி கட்டி ”ஏன்டா இந்தக் கார வாங்கினோம்?” என்று எண்ணும் நிலைக்கு வந்து விடுகிறார்கள். இந்த நிலையில் கரோனா பொதுமுடக்கத்தை ஒட்டி கார் விற்பனை சற்று சரிந்தது. பழைய கார்களின் விற்பனை அளவும் கணிசமான முறையில் உயர்ந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் எண்ணம் தற்போது பழைய கார்களின் பக்கம் திரும்பியுள்ளதால், அவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள் வாகன விற்பனையில் ஈடுபடுபவர்கள்.
இதைப்பற்றி கடந்த 20 ஆண்டுகளாக பழைய கார்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவரும் சிவக்குமார் கூறுகையில், ”ஆட்டோமொபைல் தொழில் எல்லோராலும் பரவலாக விரும்பக்கூடிய தொழில். புதிய கார்களைக் காட்டிலும் பழைய கார்களின் விற்பனை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆரம்பக் காலங்களில் கார் பிராண்டுகள் குறைவாகவே இருந்தன. தற்போது அதிக அளவிலான கார் ரகங்கள் சந்தையில் வந்துள்ளன.
பழைய கார்களை மக்கள் விரும்புவதற்கான காரணம் அவற்றின் விலையே. புதுக்கார்களை வாங்கி வெளியே எடுத்து வந்ததும், அவற்றின் மறுவிற்பனை மதிப்பு சில லட்சங்கள் குறைந்துவிடும். ஆனால் காரை பழைய காராக எடுத்தால் அதே சொகுசு கார் பாதி விலையில் நமக்கு கிடைக்கிறது. மேலும் பழைய கார்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொண்டு வேறு கார்களை எடுத்துக் கொள்ளலாம். விலையிலும் எந்த மாறுபாடும் இருக்காது.
புதிய கார் வாங்கி அவற்றை விற்கும்போது காரின் விலை முழுவதுமாகக் குறைந்தால் கொஞ்சம் மனம் கஷ்டப்படும். கரோனா காலத்திற்குப் பிறகு பழைய கார்களின் விற்பனை நன்றாக உள்ளது” என்றார்.
ஆனால் ஆன்லைன் மார்கெட்டிங் தான் தங்களைப் போன்றோருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது என்றும் சிவகுமார் தெரிவித்துள்ளார். ”கார் வைத்திருப்பவர்களே ஆன்லைனில் விளம்பரப்படுத்தி ஏதாவது ஒரு வெப்சைட்டில் போட்டு விற்பனை செய்கிறார்கள். ஆனால் அதில் நம்பகத்தன்மை இருக்காது. ஆன்லைன் விற்பனையில் காரின் தரம், இதர பிரச்னைகள் எதுவுமே தெரியாமல் விலையை மட்டுமே பார்த்துவிட்டுப் போய் வாங்குகிறார்கள். பின்னர் வாகனம் சரியில்லை என்றால் பணத்தை திரும்பப்பெற இயலாது. இவை முக்கியப் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. தெரிந்த டீலரிடம் சென்று நம்பகத்தன்மையான காரை வாங்க வேண்டும். அதுதான் சரியான முறை” என்றார்.
இந்நிலையில் பழைய கார்கள் வாங்குவதால் என்னென்ன நன்மைகள் என்பது குறித்து சமீபத்தில் பழைய கார் ஒன்றை வாங்கிய ஈரோட்டில் உணவகம் நடத்திவரும் அரவிந்தன் என்பவரிடம் கேட்டோம். தான் சமீபத்தில் பழைய கார் ஒன்றை வாங்கியதாகவும், புதிய கார் வாங்கியவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அவற்றை விற்றுவிட்டதால், தான் அதனை வாங்கியபோது அதே மாடல் கார் மிகக்குறைந்த விலையில் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.
புதிய கார் பத்து லட்சத்திற்கு வாங்கி அதற்கு அதிக அளவு வட்டி கட்டுவதற்கு பதிலாக அதே மதிப்புள்ள பழைய காரை வாங்கி நிம்மதியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அரவிந்தன் கூறுகிறார். “நீங்கள் பழைய காரை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் நல்ல நம்பிக்கையான டீலரை அணுக வேண்டும். கார்களைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்” என்றும் கூறினார். வண்டியின் மாடல், எந்த ஆண்டு வாங்கப்பட்டது, என்ன விலை, இன்ஜின் பயன்பாடு உள்ளிட்டவற்றை முறையாகப் பார்த்து வாங்க வேண்டும். எத்தனை கிலோமீட்டர் வண்டி ஓடியுள்ளது என்பனவற்றையும் பார்த்து வாங்க வேண்டும்” என்றும் கூறுகிறார் அரவிந்தன்.
எது எப்படியோ...நமக்கு என்று சொந்தமாக கார் இருக்க வேண்டும் என்று விரும்பும் நடுத்தரக் குடும்பத்தினர் பழைய காரை வாங்கினால், கொஞ்சம் கடன் பிரச்னையின்றி மகிழ்ச்சியாக வாழலாம் என்ற வகையில் இது நிச்சயம் ஒரு வரவேற்கத்தக்க விஷயம்.
இதையும் படிங்க: பூங்காக்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? நெல்லை மாநகராட்சி