கரோனா நோய்ப்பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.
மூடப்பட்ட திரையரங்குகளை திறக்க அனுமதித்திட வேண்டுமென்றும், கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை நடத்துவதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் உறுதி வழங்கியதன் பேரில் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் இன்று (நவம்பர் 10) முதல் திரையரங்குகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 35 திரையரங்குகளில் நகரப் பகுதியிலுள்ள 11 திரையரங்குகள் மற்றும் புறநகர் பகுதியிலுள்ள 24 திரையரங்குகளிலும் திரைப்படங்கள் வெளியிடுவதற்கான முன் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முதல் திரையரங்குகளைத் திறந்து கொள்ள அரசு அனுமதி அளித்த போதும் 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படுவதால் திரையரங்கங்கள் முழுமையாக சுத்தம் செய்தும், கிருமிநாசினிகள் தெளித்தும், சமூக இடைவெளி விட்டு ரசிகர்கள் உட்காருவதற்கான அறிவிப்புகள் இருக்கைகளில் ஒட்டப்பட்டும், ரசிகர்கள் உட்காரும் இருக்கைகள் மற்றும் கழிவுறைகளைத் தயார்படுத்தும் பணிகள் முடிவடைந்ததற்குப் பிறகு வருகிற வெள்ளிக்கிழமை முதல் திரைப்படங்கள் வெளியிடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளை இயக்கிக் கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசிற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ள திரையரங்க உரிமையாளர்கள் ரசிகர்கள் வழக்கம் போல் தங்களுக்கு நல் ஆதரவை வழங்கிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திரையரங்குகளை இயக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து தொடர்ந்து ஈரோட்டில் உள்ள திரையரங்கம் சுத்தப்படுத்தப்பட்டு கோமாதா பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் யாகங்களுடன் பூஜைகள் நடத்தப்பட்டன.