தொழில்நுட்பம் மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்த பின்னரும்கூட, மனிதன் உணவின்றி பசியாற ஒரு வழியும் கண்டறியப்படவில்லை. ஒருவேளை இனியேனும் கண்டுபிடித்தால் நன்றாயிருக்கும் என கற்பனைகளை வளர்க்கிறது, எல்லைகளைக் கடந்து எளியவர்களை நடக்கச் சொல்லும் பசி என்னும் உயிரியல் செயல்பாடு.
ஊரடங்கு பிறப்பித்த பின்னர் பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நடக்கத் தொடங்கினர். அவர்கள் அந்தவூர்வாசிகளில்லை, பிழைக்க வந்தவர்கள். இங்கிருந்தால், பட்டினிதான் கிடக்க வேண்டும் என்ற உணர்வுதான் அவர்களின் கால்களை சொந்த ஊரின் வழியை நோக்கித் திருப்பியது.
அது போலதான், ஓய்வு பெற வேண்டிய வயதில் நாள்தோறும் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று முடி திருத்திவருகிறார், சுப்பிரமணியம். முகக்கவசம், கையுறை சகிதம் வாடிக்கையாளரின் அருகில் அமர்ந்து அர்ப்பணிப்போடு தனது வேலையை செய்யும் இவருக்கு, கரோனா கொடுத்த நெருக்கடிகளை குறித்து அவரிடம் பேசினோம்.
“ஊரடங்கு உத்தரவால், அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டது. நானும் பங்களாபுதூரிலுள்ள எனது சலூன் கடையை மூடினேன். முடியைத் திருத்துவதால் கிடைக்கும் அன்றாட கூலிதான் என் வாழ்வாதாரம். கரோனாவால் திடீரென கடையடைப்பு, தனி நபர் இடைவெளியெல்லாம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. இதனால், சேமிப்பு கரைந்து எவ்வித வருமானமுமின்றி எனது குடும்பம் தவித்துவருகிறது” என வருந்துகிறார் சுப்பிரமணியம்.
இந்த சூழ்நிலையில், தன்னுடைய தொழிலையே மறுபடி பாதுகாப்போடு செய்து வருமானம் ஈட்டமுடியுமா? எனச் சிந்தித்து 3 கி.மீக்கு அப்பாலிருக்கும் விவசாயிகளிடம் பேசினார். ஆனால், கரோனா அச்சம் யாரைத்தான்விட்டது. விவசாயிகள் தயங்கினர். அவர்களிடம் தன் நிலையை எடுத்துக் கூறி சம்மதிக்கவைத்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஊரடங்கு முடிந்த பின்னர் நிலைமை சரியாகிவிடும் என நம்பினேன். ஆனால், மேலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டது அதிர்ச்சியை அளித்தது. இதை எப்படி சமாளிக்கப்போகிறோம் எனக் கலங்கினேன். பின்னர், தோட்டங்களில் வேலை செய்யும் விவசாயிகளிடம் நிலையை எடுத்துக்கூறி உதவி கேட்டேன். அவர்கள் தயங்கினார்கள். கரோனா ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கையாக முகக்கவசம், கையுறை, சானிடைசர் என அனைத்தையும் உபயோகிப்பதாக வாக்களித்தேன்.
அதன் பிறகு, என் வறுமையை புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டார்கள். வெகுதூரம் நடந்து சென்று சிகை திருத்தும் பணியை செய்கிறேன். இப்போது நிலைமை முன்பைவிட நன்றாகவுள்ளது. ஆனாலும், சில நாள்களில் குறைந்தபட்ச வருமானமும் கிடைப்பதில்லை. அரசு என்னைப் போன்றவர்களுக்கு உதவினால் நலமாகயிருக்கும்” என்கிறார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிற்கு ரூ.45 ஆயிரம் கோடி பாக்கி; வழங்குமா மத்திய அரசு?' - பேராசிரியர் ஜோதி சிவஞானம் பதில்