ஈரோடு மாவட்டம் அறச்சலூரிலுள்ள தனியார் கல்லூரியில், ‘இந்திய அளவில் உயர்கல்வி’ எனும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "இந்திய அளவில் உயர்கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி மாணவ - மாணவியர்களின் கல்வி நலனில் அக்கறை செலுத்திடும் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. படித்த பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2012,2014 ஆகிய இரு ஆண்டுகள் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படும் புகார்கள் ஆதாரமற்றவை. அத்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புள்ளி விபரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கம் தான், இந்திய அளவில் நிர்வாகச் செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பினை கட்டுப்படுத்தும் திட்டத்தினையும் முதன்முதலாக தமிழ்நாடு தான் நடைமுறைப்படுத்தி பெருமைப் பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறுபான்மையினருக்காக பல்வேறு திட்டங்கள் அதிக அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் மேம்பாடு முன்னேற்றத்திற்காக 78 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் போட்டிப் போட்டிக் கொண்டு மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதுடன், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது" என்றார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : ’நவரத்தினங்களில் ஒவ்வொன்றாக மத்திய அரசு விற்றுவருகிறது’ - கி. வீரமணி