ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு, அம்மாநில அரசுப் பேருந்தில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது கர்நாடக மாநிலம், மைசூர் செல்வதற்காக தயாராக நின்றிருந்த அரசுப் பேருந்தை சோதனையிட்டனர்.
அதில் 10 சாக்கு மூட்டைகளில் 280 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகேயுள்ள நிலக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (21), சத்தியமங்கலம் அருகேயுள்ள கோணமூலைப் பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் பகுதிக்கு கடத்திச் சென்று, அதிக விலைக்கு விற்க முயற்சித்தது தெரியவந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர், ஈரோடு உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் கடத்த முயன்ற நபரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு!