ஈரோடு அடுத்துள்ள கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் சங்கர். திருமணம் ஆகாத இவர் தனது உறவினரான லோகு என்பவரின் மனைவியுடன் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து, வீட்டை விட்டு வெளியே சென்று கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.
இதனைக் கண்டித்த சங்கர் மற்றும் லோகுவின் உறவினர்களின் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார்.
இந்நிலையில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக 144- தடை உத்தரவு அமல்படுத்தபட்டுள்ள நிலையில், வேலை இல்லாமல் ஓட்டுநரான சங்கரும், சலவை தொழில் செய்துவரும் லோகு, அவரது தம்பிகள் அன்பு, ராஜூ ஆகியோரும் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
ஆனால், சங்கர் மீண்டும் லோகுவின் மனைவியை பார்க்க அவரது வீட்டிற்கே வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகு சங்கருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின் இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் லோகு மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கரை சரமாரியாக குத்தியுள்ளார். இதனைக் கண்ட சங்கரின் தாய் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த நபரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல்பாளையம் காவல் துறையினர் லோகு, அவரது தம்பி அன்பு ஆகியோரை கைதுசெய்தும், தலைமறைவாக உள்ள ராஜூ என்பவரை தேடியும் வருகின்றனர்.
பின் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலைமுயற்சி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாய் இருந்த மகன் கொலை: தாய் கைது!