நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 14 வயது சிறுவன் காணவில்லை என அவரது பெற்றோர் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர்.
சிறுவனை காவல் துறையினர் பல இடங்களில் தேடிவந்த நிலையில், நான்கு நாள்களுக்குப் பிறகு மே 2ஆம் தேதி (2019) வீடு திரும்பினார். அப்போது, தான் ஒரு வீட்டில் அடைத்துவைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கொடுமுடி காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது சாலையோர தொழில் செய்துவந்த செங்கோட்டுவேல் (35) என்பவர் சினிமா பார்க்கலாம் என ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மீது கடத்தல், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நேற்று தீர்ப்பும் வழங்கப்பட்டது.
இதில், சிறுவனை கடத்தியதற்காக 7 ஆண்டுள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, தமிழ்நாடு அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா? - தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!