ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பெத்தாம்பாளையம் கொங்குநகர் பகுதியில் வசித்து வருபவர் தென்றல்வேந்தன். இவர், காஞ்சிக்கோவில் அரசினர் விடுதி அருகே தனது விலையுயர்ந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை பறித்ததுடன், அவரது விலையுயர்ந்த இரண்டு சக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றார்.
இதுகுறித்து பெருந்துறை காவல்நிலையத்தில் தென்றல்வேந்தன் புகார் அளித்தார். புகாரின் பெயரில் தனிப்படைக் காவல்துறையினர் பவானி சாலையிலுள்ள மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயகுமார் அந்தோணி என்பது தெரியவந்தது. முன்னுக்குப் பின் முரணானத் தகவலைத் தரவே அவர் மீதான சந்தேகம் உறுதியானதையடுத்து அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த நபர் மாநிலம் முழுவதும் இதுபோல் இரு சக்கர வாகனத் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும், விலையுயர்ந்த இரு சக்கர வாகனங்களை லாவகமாகப் பூட்டையுடைத்தோ அல்லது வண்டி உரிமையாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டியோ திருடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல்துறையினர், பல்வேறு இடங்களில் 21 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து வாகனத் திருடன் ஜெயகுமார் அந்தோணியை நீதிபதி முன் ஆஜர்படுத்திய காவல்துறையினர், சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் வழக்குப் பதிவு செய்து 21 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த தனிப்படைக் காவல்துறையினர் மற்றும் பெருந்துறை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.