ஈரோடு நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "தமிழர்களின் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் அகழ்வாய்வை மேற்கொள்ள முடியாத அரசு, ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்காக மக்களை வஞ்சிக்கிறது. மக்களுக்காக நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சாய கழிவுகளால் நொய்யல் ஆற்று தண்ணீர் முற்றிலும் மாசடைந்துவிட்டதாகவும், கால்நடைகளால் கூட நொய்யல் ஆற்றில் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார். தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பொதுமக்களின் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்வதாக தெரிவித்த அவர், கட்சியினரின் பணத்தை பறிமுதல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், இலங்கையில் தமிழர்களின் உயிரிழப்புக்கு காரணமான காங்கிரஸ் கட்சியையும், ஆதரவாக இருக்கும் கட்சிகளையும் மக்கள் புறகணிக்க வேண்டும் என கூறிய சீமான், கை, தாமரை சின்னத்திற்கும் வாக்களிப்பவர்களின் மரபணுவை பரிசோதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.